நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம், நோயாளிகள் கடும் அவதி..!

110

மேற்கு வங்கத்தில் மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து வரும் ஜூன் 17 நாடு முழுவதும் அனைத்து டாக்கடர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக, இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பணி பாதுகாப்புகோரி, மருத்துவர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொல்கத்தா மருத்துவர்களுக்கு ஆதரவாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மருத்துவர்கள், தலையில் கட்டுப்போட்டும், சக்கர நாற்காலிகளில் அமர்ந்தும், சிகிச்சையின் போது ஹெல்மெட்டுகளை அணிந்தவாறும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கொல்கத்தா, டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளில் 119 மருத்துவர்கள் ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தை நடத்தி வருவதால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர். மும்பை, கேரளா, ராஜஸ்தான், பெங்களூரு, சத்தீஸ்கர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதி மருத்துவர்கள் மேற்கு வங்காள மருத்துவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளதால், அனைத்து மாநிலங்களிலும் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சங்கத்தினர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தனை சந்தித்து, பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து, இந்த விவகாரத்தை மம்தா பானர்ஜி கௌரவ பிரச்சினையாக பார்க்காமல், தீர்வு காண வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில், டாக்டர்கள் போராட்டம் தொடர்பான பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள், 7 நாட்களில் மம்தா பானர்ஜி அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே, மேற்கு வங்கத்தில் மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து வரும் ஜூன் 17 நாடு முழுவதும் அனைத்து டாக்டர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக, இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.