பன்வாரிலால் புரோகித்தை திரும்பப்பெற வலியுறுத்தல் | ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திமுகவினர்..!

349

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக கடந்த அக்டோபர் மாதம் பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்றார். இதனையடுத்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை, மாவட்ட வாரியாக ஆய்வு கூட்டம் என அதிரடிக் காட்டிய பன்வாரிலால் புரோகித்தின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக திமுக சார்பில் ஆளுநர் ஆய்வு கூட்டம் நடத்த செல்லும் பகுதிகளில் கருப்புக் கொடிக் காட்டும் போராட்டம் நடத்தப்பட்டன. இதனிடையே அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் தலையீடு, பெண் நிருபரின் கன்னத்தில் தட்டிய சம்பவம் ஆகியவை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளன. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியம் தலைமையில் திமுகவினர் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சென்னை சைதாப்பேட்டையிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். இதனையடுத்து பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திமுகவினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.