செப்டம்பர் 18-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

325

அதிமுக அரசைக் கண்டித்து, வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதை அடுத்து, முதல்முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் அன்பழகன், கனிமொழி எம்பி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் எட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவி மயமாக்கும் பாஜக அரசின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊழலின் மொத்த உருவமான அதிமுக அரசை ஒருபோதும் அனுமதியோம் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்குச் செல்லவும், கடலில் வீணாக கலப்பதைத் தடுக்கவும் உடனே நடவடிக்கை எடுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை தாமதிக்காமல் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர், டிஜிபி-யை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் முழுஅடைப்பு போராட்டம் வெற்றி பெற ஒத்துழைப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றுவோம் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், அதிமுக அரசின் ஊழல்களைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.