திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினுக்கு எதிராக போர்க்குரல் எழுப்ப திட்டம்..!

346

செப்டம்பர் 5ஆம் தேதி அமைதிப் பேரணியை எழுச்சியாக நடத்துவது தொடர்பாக, மு.க. அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப்பின், அக்கட்சியில் செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி இடையே உண்மையான தொண்டர்கள் ஆதரவு யாருக்கு? மேலும் கட்சியில் அதிகாரம் யாருக்கு என்பதிலும், பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது. இதனையடுத்து, செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப்பேரணி நடத்தி தனது பலத்தை நிரூபிப்பேன் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். இந்தப் பேரணி, திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் இருந்து துவங்க சென்னை காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, தி.மு.க.,வில் தன்னைச் சேர்த்துக் கொள்வதுபோல் தெரியவில்லை என்று கூறினார்.

தனது மனக் குமுறலை, எப்போது கூற வேண்டும் என, அப்பா கூறுகிறாரோ, அப்போது, மக்களிடம் கூறுவேன் என்று கூறிய மு.க.அழகிரி, தனது ஆதங்கம், நேரம் வரும்போது வெளிப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மதுரை டிவிஎஸ் நகரில் அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அமைதிப்பேரணிக்கு ஆள் திரட்டுவது குறித்தும், திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினுக்கு எதிராக போர்க்குரல் எழுப்புவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் அழகிரியின் ஆதரவாளர்கள், திமுக அதிருப்தியாளர்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்.