சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தே.மு.தி.க. வலியுறுத்தல்..!

220

விவசாயிகள், விளை நிலங்கள் பாதிக்காத வகையில் சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று தே.மு.தி.க. வலியுறுத்தியுள்ளது.

தே.மு.தி.க. தலைமை செயற்குழு கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி செயலாளர் சுதீஷ், செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரை தமிழக அரசு முறையாக பெற்றுத்தர வேண்டும், தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுதுவதற்கு வழிவகை செய்ய வேண்டும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகள் மற்றும் விளை நிலங்களை பாதிக்காத வகையில் சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் எனவும் தே.மு.தி.க. செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.