திண்டுக்கல் அருகே பள்ளிச்சிறுமி அடித்துக்கொலை!

1825

திண்டுக்கல் அருகே பள்ளிச்சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்டநிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அடுத்த செம்மினம்பட்டியைச் சேர்ந்த ஜெயக்கண்ணன்-சிவகாமி தம்பதியின் மகள் முத்துலட்சுமி அரசுப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், முத்துலட்சுமியிடம், அவரது பாட்டி, தான் வாங்கிய ரேஷன் பொருட்களை கொடுத்து, அவ்வழியாக சைக்கிளில் சென்ற ராஜ்குமார் என்பவரிடம் வீட்டில் இறக்கி விடுமாறு அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் மாணவி முத்துலட்சுமி வீடு வந்துசேராத நிலையில், மலைக்காட்டு பகுதியில் தலையில் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும், மாணவி அணிந்திருந்த கொலுசு, வளையல்கள் மாயமாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனிடையே, சிறுமி உயிரிழந்ததை அடுத்து, ஆத்திரமடைந்த கிராமமக்கள், ராஜ்குமாரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கிராமமக்கள் திண்டுக்கல் – திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.