எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டவில்லை தினகரன் தரப்பினர் விளக்கம்!

744

திமுகவுடன் கூட்டு சேர்ந்து எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.
பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிடக்கோரி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். முதலமைச்சருக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோன்று, தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தையும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு விசாரித்து வருகிறது. இந்தநிலையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஆட்சியை கவிழ்க்க திமுகவுடன் கூட்டு சேர்ந்து செயல்படவில்லை என வாதிட்டார். முதலமைச்சரை மாற்ற மட்டுமே எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்ததாக அவர் விளக்கம் அளித்தார்.