விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விற்பனை அதிகரிப்பு..!

308

தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், ஜருகு, மொம்மிடி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் குண்டு மல்லி, சன்னமல்லி, கனகாம்பரம், சாமந்தி, சம்பங்கி, அரளி, செண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட ரக பூக்கள் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தருமபுரி அங்காடிக்கு தினசரி 10 டன்னுக்கு மேல் பூக்கள் விற்பனையாகும். மொத்த வியாபாரிகளிடமிருந்து சில்லறை வியாபாரிகள் பூக்களை விலைக்கு வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி மற்றும் இந்த மாதத்தின் கடைசி முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், தண்ணீர் இல்லாததால் மலர் சாகுபடி குறைந்துள்ளது. இதனால் பூக்களின் வரத்து சரிந்து விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ குண்டு மல்லி 300-லிருந்து 600 ரூபாயாகவும், சன்னமல்லி 250-லிருந்து 600 ரூபாயாகவும், கனகாம்பரம் 500 ரூபாயாகவும், சம்பங்கி 400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.