முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கும் தங்க கவசத்தை பசும்பொன் எடுத்துச் செல்வதில் சிக்கல் ..!

386

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்பூசல் காரணமாக, முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கும் தங்க கவசத்தை பசும்பொன் எடுத்துச் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுக சார்பில், ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட 13 கிலோ எடைகொண்ட தங்கக் கவசம், ஆண்டுதோறும், தேவர் ஜெயந்தி விழாவின் போது, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு, பின்னர் மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கியில் வைக்கப்படுவது வழக்கமாகும். இந்த நிலையில், அதிமுக உட்கட்சி பூசல் காரணமாக, அக்கட்சி நிர்வாகிகளிடம் தங்க கவசத்தை கொடுக்க வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து, தங்க கவசத்தை பெற்று பசும்பொன் கொண்டு செல்ல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், சசிகலாவால் நியமிக்கப்பட்ட பொருளாளர் ரெங்கசாமியிடம்தான் தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என வங்கி நிர்வாகத்துக்கு டிடிவி. தினகரன் கடிதம் எழுதியுள்ளார். அதேநேரத்தில் பசும்பொன் தேவர் நினைவாலய பொறுப்பாளர்களிடம் தங்க கவசத்தை ஒப்படைக்க ஆட்சேபனை எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தங்களிடம் தங்க கவசத்தை ஒப்படைத்தால், தேவர் ஜெயந்தி முடிந்த பின்னர் நவம்பர் 1-ந் தேதி முறைப்படி வங்கியில் ஒப்படைப்போம் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

இதனையடுத்து, சர்ச்சைகளை தவிர்க்க, 27-ம் தேதிக்குள் தங்கக் கவசத்தைப் பாதுகாப்புடன் கொண்டு சென்று, பசும்பொன் அறக்கட்டளை அறங்காவலரிடம் ஒப்படைக்க வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.