சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை 6 வழிச்சாலையாக மாற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு..!

243

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு வழங்கப்படும் நிதி 7 ஆயிரத்து 210 கோடியாக குறைத்ததுடன், 6 வழிச்சாலையாக மாற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ள புதிய அறிக்கையில், சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தில், பல மாற்றங்களை செய்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சேலத்தில் உள்ள கல்வராயன் மலை பாதிக்காதவாறு செங்கம் – சேலம் சாலை வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வனப்பகுதியில் 13 புள்ளி 2 கிலோ மீட்டருக்கு பதில் 9 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே சாலை அமைக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

300 ஏக்கருக்கு பதில் 103 ஏக்கர் வனப்பகுதி மட்டும் கையகப்படுத்தப்படும் என்று கூறியுள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை, வனப்பகுதியில் 70 மீட்டருக்கு பதில் 50 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சாலை திட்ட மதிப்பீடு 10 ஆயிரம் கோடியில் இருந்து 7 ஆயிரத்து 210 கோடியாக குறைத்து, 6 வழிச்சாலை மட்டும் முதல் கட்டமாக போடப்படும் என்றும் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.