டெங்கு பாதிப்பு குறித்து சென்னையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், மத்திய குழு ஆலோசனை நடத்தி வருகிறது!

2256

டெங்கு பாதிப்பு குறித்து சென்னையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், மத்திய குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் டெங்கு பாதிப்புக்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்த 5 பேர் கொண்ட நிபுணர் குழு சென்னை வந்துள்ளது. தற்போது இந்த குழு சென்னை தேனாம்பட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். டெங்கு பரவாமல் தடுக்க அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு அமைத்துள்ள குழுவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் அசுதோஷ் பிஷ்வாஸ், சுவாதி துப்லிஸ் ஆகிய 2 மருத்துவர்கள் இடம்பிடித்துள்ளனர். அதே போன்று பூச்சியினால் பரவும் நோய்க்கட்டுப்பாட்டு மைய இயக்குனர் கவுஷல் குமார், இணை இயக்குனர் கல்பனா பர்வா, துணை இயக்குனர் வினய் கர்க் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.