டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களுர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

329

டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களுர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
டெல்லியில் இடைவிடாது பெய்த கனமழையால் குர்கான் பகுதியில் உள்ள பத்சாபூர் கழிவு நீரோடை நிரம்பி வழிந்தது. இதில் இருந்து வெளியேறிய கழிவு நீர் டெல்லி – குர்கான் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் வரிசையாக நின்றதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இன்று காலை வரை நீடித்த இந்த போக்குவரத்து நெரிசலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடையும் வரை குர்கானுக்கு வாகனத்தில் வரவேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி உத்தரவிட்டுள்ளார்.

ஐடி நகரம் என அழைக்கப்படும் பெங்களுருவில் கனமழையால், வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மழைநீரில் தவித்து வரும் மக்களை மீட்க படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. மாநில போலீஸாரும், மீட்புப்படையினரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தவிப்பவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

மற்றொரு நகரமான, ஐதராபாத்தின் டோலி சௌகி, மேதாபட்டிணம், பேகம்பட் மற்றும் செகந்தராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மும்பையிலும் இதேபோல அந்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.