வீட்டுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால்

257

வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் 72 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் நியாய விலை கடைகள் மூலம், ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர். ஆனால் பொருட்களின் எடை குறைவு, இருப்பு இல்லாதது, திருட்டு, தரமற்ற பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் பொதுமக்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டன. இந்த குறைபாடுகளை போக்கும் வகையில், பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு ஒப்புதல் அளித்தது.

அதன்படி, வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை அமல்படுத்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்துமாறு, டெல்லி உணவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் அதிகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது