தமிழக மருத்துவ மாணவன் மர்மமான முறையில் மரணம் தலையில் காயம் இருந்ததாக டெல்லி போலீசார் தகவல்..!

216

டெல்லி மருத்துவக்கல்லூரியில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழக மாணவர் சரத் பிரபுவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த அரசியல்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் பகுதியை சேர்ந்த சரத் பிரபு, டெல்லியில் உள்ள யு.சி.எம்.எஸ் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்தார். இந்த நிலையில், கல்லூரி விடுதியில் உள்ள கழிவறையில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் மாணவனின் தலையில் காயம் இருந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ள நிலையில், அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் மாணவனின் உடல் தமிழகம் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் மருத்துவக்கல்லூரியில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழக மாணவன் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என அரசியல்கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மாணவர் சரத் பிரபுவின் மரணம் இயற்கையாக நிகழ்ந்ததாக தெரியவில்லை எனவும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.கடந்த முறை மர்மமான முறையில் இறந்த தமிழக மாணவன் சரவணன் வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என குறிப்பிட்ட அவர், சரத்பாபுவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.