ஏர்செல் -மேக்சிஸ் ஊழல் வழக்கு : டெல்லி கோர்ட்டில் ப.சிதம்பரம் புகார்

212

ஏர்செல் – மேக்சிஸ் விவகாரத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையை கசிய விட்டுள்ளது என டெல்லி கோர்ட்டில் ப.சிதம்பரம் புகார் அளித்துள்ளார்.

மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதற்கு பலனாக கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து ப.சிதம்பரம் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., டெல்லி தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அந்த குற்றப்பத்திரிகையின் அம்சங்கள், ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் குற்றப்பத்திரிகையை கோர்ட்டு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்பாகவே, சி.பி.ஐ. திருட்டுத்தனமாக அதன் பிரதியை குறிப்பிட்ட நாளிதழுக்கு வழங்கியுள்ளது என டெல்லி கோர்ட்டில் ப.சிதம்பரம் புகார் அளித்துள்ளார். ஏர்செல் – மேக்சிஸ் விவகாரத்தை பரபரப்பு ஆக்குவதற்காக தவணை முறையில் வெளியிட செய்திருப்பதாக தோன்றுகிறது எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி. சைனி, இது குறித்து அக்டோபர் மாதம் 8-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.