டெல்லியில் 15-வது நிதிக்குழு தலைவர் கே.பி.சிங் – துணைமுதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு..!

960

15-வது நிதிக் குழுவில் தமிழகத்துக்கு பாதகமான அம்சங்களை நீக்க வலியுறுத்தி, மத்திய நிதி ஆணையத்திடம் முறையிடுவதற்காக, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.இதுதொடர்பாக, ஏற்கனவே கடந்த 10 ம்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 15 வது நிதிக்குழுவின் பரிந்துரையில் இடம்பெற்றுள்ள தமிழகத்திற்கு பாதகமான அம்சங்களைத் திருத்த மத்திய அரசிடம் வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.மேலும், இந்தக் கூட்டத்தில், 15-வது நிதிக்குழுவின் ஆய்வு வரம்புகளில், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக்குப் பதிலாக, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினைக் கருத்தில் கொள்ள வேண்டுமென்ற முடிவு தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது.
இந்த நிலையில், டெல்லியில் முகாமிட்டுள்ள துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இன்று நிதிக்குழு தலைவர் கே.பி.சிங்கை நேரில் சந்தித்து, 15-வது நிதிக்குழு பரிந்துரையில், தமிழகத்துக்கு பாதகமான அம்சங்கள் குறித்து எடுத்துரைக்கிறார். மேலும், மத்திய நிதிக்குழு உறுப்பினர்களையும் சந்தித்து, 15வது நிதிக்குழு பரிந்துரையில், தமிழகத்துக்கு பாதகமான அம்சங்களை நீக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்துவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.