18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு இன்று 6ஆம் நாளாக விசாரணை..!

251

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை ஆறாவது நாளாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஐந்தாவது நாளாக நேற்று ஐகோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில், 18 எம்எல்ஏ-க்களும் ஆளுனரை சந்தித்தது சட்ட விரோதம் என சபாநாயகர் தனபால் தரப்பில் வாதாடப்பட்டது. முதலமைச்சரை மாற்ற ஆளுநருக்கு அதிகாரம் இல்லை, இந்தக் கோரிக்கையுடன் ஆளுநரை சந்திப்பது சட்ட விரோதம் என்ற உச்சநீதிமன்ற கருத்தும் சபாநாயகர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

18 எம்எல்ஏக்களின் நோக்கம் ஆட்சியை கலைக்கவேண்டும் என்பதே எனவும், ஆவணங்களை முறையாக ஆய்வு செய்து தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், 18 பேரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார். இதனைத்தொடர்ந்து, ஆறாவது நாளான இன்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.