உலக நாடுகளில் பரவும் கிகி டான்ஸ் இந்தியாவிலும் பரவுகிறது..!

613

ஓடும் காரில் இருந்து இறங்கி, சாலையில் நடனமாடும், கிகி சேலஞ்ச் என்ற விபரீத செயலில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேச மாநில போலீஸார் எச்சரித்துள்ளனர்.

கனடாவைச் சேர்ந்த பிரபல பாடகரான டிராகே என்பவர், டுவிட்டர் மூலம் விடுத்துள்ள, கிகி சேலஞ்ச் என்ற ஆபத்தான நடவடிக்கை, பல நாடுகளில் பிரபலமாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி, சாலையில் நடனம் ஆடி விட்டு, மீண்டும் காரில் ஏற வேண்டும் என்பது, இந்த விபரீத சவாலின் முக்கிய அம்சமாகும்.
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து, இந்தியாவில் பல நகரங்களிலும் கிகி சவாலை ஏற்று, ஆபத்தை உணராமல், பலரும், சாலையில் நடனமாடி வருகின்றனர். பாலிவுட் நடிகைகள் அடா சர்மா, நோரா பதே, நியா சர்மா, கரிஷ்மா சர்மா உள்ளிட்டோர் காரில் இருந்து இறங்கி கிகி பாடலுக்கு நடனமாடும் காணொளிக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இந்த வரிசையில் தமிழ் நடிகை ரெஜினா கசான்ட்ராவும் ஓடும் காரில் இருந்து இறங்கி சாலையில் நடனமாடியுள்ளார். இந்த காணொளி அவரது ட்விட் டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இத்தகைய நடனத்தால் விபத்துகள் நேரிடும் என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். ஓடும் காரில் இருந்து இறங்கி கிகி பாடலுக்கு சாலையில் நடனமாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.