ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முக்கொம்பு அணையின் 9 மதகுகள்..!

145

கொள்ளிடம் ஆற்று மதகு உடைப்பு குறித்து முதலமைச்சரிடம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சரின் முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 45 மதகுகள் கொண்டு திருச்சி முக்கொம்பு மேலணை கட்டப்பட்டது. இந்தநிலையில், அணையில் 9 மதகுகள் திடீரென ஆற்றில் அடித்து செல்லப்பட்டதுடன், மேலாணையின் 4 தூண்களும் உடைந்து விழுந்தது. இதையடுத்து அணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில், முக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பினை முதலமைச்சரின் முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பினால் பாதிப்பு இல்லை என்றும், காவிரிக்கு நீர் திறக்கும் பகுதி பாதுகாப்புடன் உள்ளதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி, முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் உடைந்துள்ளதாக தெரிவித்தார். உடைந்த பகுதிகளை, தொழில்நுட்ப இயந்திரங்கள் உதவியுடன் தற்காலிகமாக சரி செய்யும் பணி, இன்றே தொடங்கப்பட உள்ளதாக அவர் கூறினார். முக்கொம்பு அணையை முதலமைச்சர் பழனிசாமி நாளை பார்வையிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.