முக்கொம்பு அணையைத் தொடர்ந்து, முக்காணி கதவணையில் உடைப்பு..!

489

முக்கொம்பு மேலணை உடைப்பைத் தொடர்ந்து, திருச்செந்தூர் அருகே முக்காணி தடுப்பணை உடைந்துள்ளது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகே தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், ஆற்றின் குறுக்கே, 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 13 மீட்டர் உயரத்தில், கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் பிளவு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக வெளியேறி, கடலில் கலந்து வருகின்றது. கடந்த ஆண்டு வேலை ஆரம்பித்து, சில மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்ட முக்காணி தடுப்பணை தற்போதைய வெள்ளத்தில் உடைந்துள்ளது அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படு்த்தியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து சென்ற ஒப்பந்ததாரர்கள், தடுப்பணையில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, தற்காலிகமாக தண்ணீர் வெளியேறுவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆற்றின் கரையை பலப்படுத்தாமல், அணையை கட்டியதோடு, தடுப்பணையை ஆழப்படுத்துவதாகக் கூறி, லாரிகளில் மணலை கொள்ளையடித்துச் சென்றதால், அணையில் பிளவு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமிழக அரசு உடனடியாக, முக்காணி தடுப்பணை மதகு உடைப்பை சரி செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.