மேட்டூர் அணையில் இருந்து அணையிலிருந்து 1 லட்சத்து 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக கபினி, கே.ஆர்.எஸ் அணைகள் முழு கொள்ளளவை எட்டிவிட்டன. இதனால், அந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணை கிடுகிடுவென உயர்ந்து, ஒரே ஆண்டில் 2 வது முறையாக முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையிலிருந்து 1 லட்சத்து 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி முக்கொம்பு அணைக்கும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதனால், முக்கொம்பு அணையில் இருந்து காவிரி ஆற்றில் 30 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 30 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து, காவிரி ஆறு, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் வினாடிக்கு 28 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணை 16அடியை தாண்டியது.

வினாடிக்கு 268 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் 3 வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.