ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

92

கொல்கத்தாவுக்கு எதிரான ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 29வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்துக் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேன் மற்றும் கிரிஸ் லின் களமிறங்கினர். சுனில் நரேன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ராணா 21 ரன்களுக்கும் ராபின் உத்தப்பா ரன் ஏதும் எடுக்காமலும் தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் மட்டும் நிதானமாக விளையாடி 82 ரன்களை குவித்தார். இதனையடுத்து 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், கேப்டன் தோனி ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்தனர். இருப்பினும் பொறுப்புடன் விளையாடிய ரெய்னா, ஜடேஜா வெற்றிக்கு வித்திட்டனர். இறுதியில் சென்னை அணி 19 புள்ளி 4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா 58 ரன்னுடனும், ஜடேஜா 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.