உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டம் | 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

138

உலகக் கோப்பை போட்டியையொட்டி நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது.

10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. லண்டனில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணியின் ரோகித் சர்மா 2 ரன், ஷிகர் தவான் 2 ரன், லோகேஷ் ராகுல் 6 ரன் என்ற ஒற்றை இலக்கில் வெளியேறினர். கேப்டன் விராட் கோலி 18 ரன், ஹர்திக் பாண்ட்யா 30 ரன், டோனி 17 ரன், தினேஷ் கார்த்திக் 4 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக ஜடேஜா 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 39.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா 179 ரன்களை சேர்த்தது.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து, 37.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது. கேப்டன் கேன் வில்லியம்சன் 67 ரன்களும், ராஸ் டெய்லர் 71 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டு ஆட்டமிழந்தனர்.