ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி..!

88

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. மொகாலியில் நடைபெற்ற 28-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் 99 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது.

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் இணைந்து, தங்களது அணியின் ரன்களை உயர்த்தினர். விராட் கோலி 67 ரன்களும், ஆட்டமிழக்காமல் டிவில்லியர்ஸ் 59 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 19 புள்ளி 2 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்த பெங்களூரு அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி, ஐ.பி.எல். தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.