உலகக் கோப்பை அரையிறுதி போட்டி | ஆஸ்திரேலியா – இங்கிலாந்து மோதல்

160

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 18ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி வெளியேறியது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையே மான்செஸ்டரில் நடைபெற்றது. செவ்வாயன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 46 புள்ளி ஒரு ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 211ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் மீதி ஆட்டம் மீண்டும் நேற்று நடத்தப்பட்டது. இதில் நியூசிலாந்து அணி 50ஓவர் முடிவில் 8விக்கெட் இழப்புக்கு 239ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகப்பட்சமாக டெய்லர் 74 ரன்களும், வில்லியம்சன் 67 ரன்களும் எடுத்தனர்.

240ரன்கள் என்கிற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஆளுக்கு ஒவ்வொரு ரன் எடுத்து வெளியேறினர். அதன்பிறகு வந்த ரிசப் பந்த் ஓரளவுக்குத் தாக்குப் பிடித்து 32ரன்கள் சேர்த்தார். ஹர்திக் பாண்டியாவும் 32ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் அதிகப்பட்சமாக ரவீந்திர ஜடேஜா 77 ரன்களும், மகேந்திர சிங் தோனி 50ரன்களும் எடுத்தனர். 49 புள்ளி மூன்று ஓவர்களில் இந்திய அணி 221ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 18ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய மேத் ஹென்றி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று பர்மிங்காமில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.