நெமிலி திட்ட டெண்டருக்கு விண்ணப்பித்த 5 பேரும் தகுதியற்றவர்கள் என நிராகரிப்பு..!

148

நெமிலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதில் முறைகேடு நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெமிலி திட்ட ஒப்பந்தத்தை முடிவு செய்ய நியமிக்கப்பட்ட ஏ.இ.சி.ஒ.எம். என்ற நிறுவனம், விண்ணப்பித்த 5 விண்ணப்பதாரர்களையும் தகுதியற்றவர்கள் என கூறிவிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். சூயஸ் என்ற நிறுவனத்துக்கு நெமிலி திட்ட ஒப்பந்தத்தை அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள கே.பாலகிருஷ்ணன், இதற்காக, சிபிஐ வழக்கில் சிக்கியுள்ள கோப்ரா என்ற நிறுவனத்தையும் விண்ணப்பத்தில் பெயரளவுக்கு இணைத்து, பின்னர் சிபிஐ வழக்கைக் காரணம் காட்டி சூயஸ் நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தப் பணியை கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனவே, தற்போது உத்தேசித்துள்ள ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தும் நடைமுறையை கைவிட்டு, தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள அவர், நெமிலி திட்டத்துக்கு புதிதாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.