8 வழிச்சாலை – நிலம் கையகப்படுத்த தடை..!

283

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் – சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில், 8 வழிச்சாலை திட்டத்தை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், திட்டத்தை இறுதி செய்யும்வரை நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, அறிக்கையில் முரண்பாடு உள்ளதால், 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து, 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை தடை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், 8 வழிச்சாலை திட்டத்திற்காக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில், வனத்துறை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும் மத்திய அரசுக்கு ஆணையிட்டு, வழக்கு விசாரணையை 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.