முதலமைச்சர் குறித்து அவதூறான தகவல்கள் கூறியதாக வழக்கு : ஸ்டாலின் செப்டம்பர் 24ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

331

முதலமைச்சர் குறித்து அவதூறான தகவல்களை கூறியதாக தொடரப்பட்ட வழக்கில், செப்டம்பர் 24ஆம் தேதி மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜீன் மாதம் 21ஆம் தேதி, திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சிறுபான்மைப் பிரிவினர் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் அப்போதைய செயல்தலைவரும், தற்போதைய தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது ஸ்டாலின் தனது உரையில், முதலமைச்சர் மற்றும் தமிழக அரசு பற்றி அவதூறான தகவல்களை கூறியதாக, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

விசாரணைக்கு இன்று அவர் ஆஜராகாத நிலையில், சென்னையில் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளதால், ஸ்டாலினால் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி குமரகுரு, வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 24-ந்தேதிக்கு ஒத்தி வைத்து, அப்போது மு.க.ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.