தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை 12 வாரத்திற்குள் செயல்படுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு

133

தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை 12 வாரத்திற்குள் செயல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் ஊழலில் ஈடுபட்டால், அவர்களை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்தியது. இதன்படி தமிழக சட்டப்பேரவையிலும் கடந்த ஆண்டு லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் லோக் ஆயுக்தாவை அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் தமிழக தலைமை செயலாளர் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு வந்தது.

அப்போது தலைமை செயலாளரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, லோக் ஆயுக்தா தேர்வு குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அடுத்த 4 வாரத்திற்குள் லோக்ஆயுக்தா குழு உறுப்பினர்களை தமிழக அரசு நியமிக்கவும் ஆணையிட்டார். இதே போல் மற்ற மாநிலங்களும் லோக் ஆயுக்தாவை செயல்படுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பிப்ரவரி 1ம் தேதி முதல் லோக் ஆயுக்தா செயல்படுத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே உறுதியளித்திருந்து குறிப்பிடத்தக்கது.