இலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

107

இலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 17 மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. #Srilanka #Sourt

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க கடந்த 26-ம் தேதி பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதே நாளில் நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து ராஜபட்சவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தை முடக்கிய சிறீசேனா, பின்னர் 14-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என அறிவித்தார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியானது . இதனால் இலங்கை அரசியலில் உச்சகட்ட திருப்பமாக, நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேன உத்தரவிட்டார். அத்துடன் ஜனவரி 5-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி உள்பட மூன்று பிரதான கட்சிகள் உள்ளிட்ட 17 கட்சிகள் சார்பில் கொழும்பில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் அதிபர் சிறிசேனாவின் நாடாளுமன்ற கலைப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், மீண்டும் நாடாளுமன்றம் செயல்படுவதற்கு உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது. இந்த வழக்கில் அதிபர் சிறி சேனா தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை இன்று நடைபெறும் அறிவித்தனர். அதன்படி, உச்சநீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட 17 மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.