காங். எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் வருமான வரித்துறை சோதனை!

279

குஜராத் மாநில காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள பெங்களூரு சொகுசு விடுதி, கர்நாடக மாநில எரிசக்தித்துறை அமைச்சரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
குஜாராத் மாநிலத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அமைச்சர் ஸ்மிருதி இரானி இருவரும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக, அக்கட்சியின் மூத்தத் தலைவர் அகமது படேல் களம் காணுகிறார்.
இதனிடையே, முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநிலத் தலைவருமான சங்கர்சிங் வகேலா, காங்கிரசிலிருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து, மேலும் சில சட்ட மன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இந்த சம்பவம் மாநிலங்களவைத் தேர்தலை சந்திப்பதில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மீதமுள்ள எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் தடுப்பதற்காக, மொத்தமுள்ள மொத்தமுள்ள 57 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 54 எம்.எல்.ஏக்கள் பெங்களூரு அருகே உள்ள ஈகிள்டன் என்ற சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.கர்நாடக மாநில எரிசக்தித்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகம்ஈ சென்னையிலுள்ள அவரது வீடு
உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் சிவக்குமாரின் சகோதரரும், சுரேஷ் எம்.பி. வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.