ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் எரிபொருள் விலையை கொண்டுவர வேண்டும் – திருநாவுக்கரசர்

497

பெட்ரோல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வலியுறுத்தி, அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 10ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றி பெறச் செய்வதற்கான ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், திமுக சார்பில் அக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், மதிமுக சார்பில் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் சார்பில் வன்னியரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆறுமுக நைனார், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், மக்கள் பணத்தை சுரண்டி மத்திய அரசு பயனடைந்து வருவதாக குற்றஞ்சாட்டினார். மேலும், ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்குள் பெட்ரோல் விலையை கொண்டு வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.