ஆந்திர மக்களின் கோரிக்கைக்கு காங்கிரஸ் ஆதரவு..!

141

பிரதமர் மோடி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் பங்குபெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும், ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நாயுடுவின் போராட்டம் இரவு 8 மணி வரை 12 மணிநேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், ஆந்திர மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள், மாநில அரசு ஊழியர் சங்கம், மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, தனி மனிதன் மீது தாக்குதல் நடத்துவதை பிரதமர் மோடியும், மத்திய அரசும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். ஆந்திர மக்களின் சுயமரியாதையை பாதுகாக்கவே உண்ணாவிரதப் போராட்டம் என்றும், மத்திய அரசு தாக்குதல் நடத்தினால், பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ப்ரூக் அப்துல்லா உள்ளிட்டோர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, அறிவிப்புகளை மட்டும் வெளியிட்ட பிரதமர் மோடி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தார். ஆந்திர மக்களின் கோரிக்கைகளுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன் என்று கூறிய ராகுல் காந்தி, மோடி எங்கு சென்றாலும் பொய் சொல்வதாகவும், அவரிடம் நம்பகத்தன்மை இல்லை என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை சந்தித்து, தனது கோரிக்கை மனுவை அளிக்க உள்ளதாகவும் ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.