கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி | காங்கிரஸ் தலைவர்கள் அவசர ஆலோசனை

106

கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதால் பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்கள் அவசர ஆலோசனை நடத்தினர்.

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டபேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸூம் மதச்சார்பற்ற ஜனதாதளமும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. முதலமைச்சராக குமாரசாமியும், துணை முதலமைச்சராக பரமேஸ்வரும் இருந்து வருகின்றனர். எனினும், 104 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக அங்கு ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளி, அமைச்சர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள நாகேந்திரா மற்றும் ஆனந்த்சிங் ஆகிய 3 பேரும் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாகவும், அவர்கள் பாஜக தலைவர்களுடன் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே, அமைச்சர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள பி.சி.பட்டீல், பீமா நாயக், ஹொலகேரி, பிரதாப் பட்டீல், கணேஷ் ஹூக்கேரி, உமேஷ் ஜாதவ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் வரும் 16-ந் தேதி தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜக வில் சேர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் , அமைச்சருமான டி.கே சிவக்குமார், மும்பை சென்ற 3 உறுப்பினர் களையும் பாஜக வினர் வளைக்க திட்டமிட்ட அனைத்து தகவல்களும் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் பாஜகவின் இந்த நடவடிக்கையை வீதிவீதியாக எடுத்து சென்று மக்களிடம் தெரிவிப்போம் என்றும் கூறினார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் குமாரசாமி 3 காங்கிரஸ் உறுப்பினர்களும் தம்மிடம் தெரிவித்து விட்டுத்தான் மும்பை சென்றதாக தெரிவித்துள்ளார். பாஜகவின் சதிகளை முறியடிக்க தமக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.