ஒரே தேசம் ஒரே தேர்தல் நடத்துவது அரசியலமைப்பு சட்டத்தில் முறைகேடு செய்வதற்கு ஒப்பாகும் – காங்கிரஸ்

634

ஒரே தேசம் ஒரே தேர்தல் நடத்துவது அரசியலமைப்பு சட்டத்தில் முறைகேடு செய்வதற்கு ஒப்பாகும் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

மக்களவைக்கும், மாநில பேரவைகளுக்கும் ஒருங்கிணைந்து தேர்தலை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் தேர்தல் செலவினங்கள் குறையும் என்றும், மத்திய அரசின் நலத் திட்டங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் சீராகச் சென்றடையும் என்றும் பாரதிய ஜனதா தெரிவித்து வருகிறது. இதற்கு அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்திதொடர்பாளர் அபிஷேக் சிங்வி, ஒரே தேசம்; ஒரே தேர்தல் என அடுக்கு மொழி கூறி மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது என்றார். இது பாஜகவின் மற்றுமொரு மோசடி நடவடிக்கைதான் என விமர்சித்த அவர், ஒரே தேர்தல் நடத்தினால் இந்திய ஜனநாயக நடைமுறையே பாதிக்கப்படும் என்று தெரிவித்தார். இதுபோன்ற திட்டத்தை மத்திய அரசு முன்னெடுப்பது சர்வாதிகார ஆட்சி என்பதன் உதாரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.