வாஜ்பாய் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : எய்ம்ஸ் மருத்துவமனை புதிய அறிக்கை வெளியீடு

222

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனால் பா.ஜ.க வின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில், நீரிழிவு நோயால் கடந்த ஜூன் 11 அன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து நேற்று மாலை அறிக்கை வெளியிட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, கடந்த 24 மணி நேரத்தில் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தனர். இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிர் காக்கும் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இதனால் பா.ஜ.க வின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.