வாஜ்பாயின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..!

138

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில், நீரிழிவு நோயால் கடந்த ஜூன் 11 அன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை மருத்துவமனை சென்ற பிரதமர் மோடி, மருத்துவர்களிடம் வாஜ்பாய் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, கடந்த 24 மணி நேரத்தில் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. உயிர் காக்கும் கருவிகள் கொண்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று, வாஜ்பாய்யின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.