காவிரி ஆற்றில் கட்டப்பட்ட முக்கொம்பு அணை..!

319

திருச்சி முக்கொம்பு மேலணையின் 8 மதகுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

திருச்சி – சேலம் சாலையில் வாத்தலை என்ற இடத்தில் முக்கொம்பு மேலணை உள்ளது. 1836-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட முக்கொம்பு மேலணையில் தண்ணீர் திறப்பதற்காக 45 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்ட நிலையில் முக்கொம்பு மேலணையில் இருந்த 8 மதகுகள் திடீரென ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. அத்துடன், மேலாணையின் 4 தூண்களும் உடைந்து விழுந்தது. இதையடுத்து அணையில் இருந்து சுமார் 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மதகுகள் உடைந்த நிலையில் அணையின் கீழ்பாலத்தின் நடுவே உள்ள ஒரு பகுதியும் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே சேதமடைந்த முக்கொம்பு அணை பகுதியை திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மதகுகள் உடைந்திருந்தாலும் நீர் திறப்பு குறைவு என்பதால் கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என தெரிவித்தார். சேதமடைந்த அணைப்பகுதி இன்று மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, மறு சீரமைப்பு பணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.