கருணாநிதி உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்..!

314

கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவரை நாற்காலியில் அமர வைத்து மருத்துவர்கள் பயிற்சி அளித்தனர். மேலும், ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் தொடர்ந்து 6 -வது நாளாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, நாற்காலியில் உட்கார வைத்து அவருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கருணாநிதியின் உடல்நலம் குறித்து, இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு வந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஸ்டாலின், கனிமொழியிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் கருணாநிதி உடல்நலம் பெற, அவரது மனதைரியம் காரணம் என்று தெரிவித்தார்.

இதே போல் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், கார்த்திக் சிதம்பரமும் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர். இதனைத்தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் நடிகர்கள் போண்டா மணி, முத்துக்காளை, கிங்காங், சிவகார்த்திகேயன் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர்.