காவிரி தாய்க்கு மரியாதை செலுத்திய முதல்வர்..!

176

டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிவரை தண்ணீர் வரை திறக்கப்படுகிறது.

கர்நாடகத்தின் குடகு மாவட்டத்திலும், கேரளாவின் வயநாடு பகுதியிலும் தொடர்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக மைசூரு அருகே உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கும் மற்றும் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அந்த அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால், அவற்றில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு நேற்று இரவு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், அணை வேகமாக நிரம்பியது. கடந்த 4 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் சுமார் 40 அடிக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

போதிய நீர் இருப்பு இருந்தால் காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை ஆண்டு தோறும் ஜூன் 12-ந் தேதி திறக்கப்படுவது வழக்கம். தற்போது நீர்மட்டம் 100 அடியை எட்டியதால், பாசனத்துக்காக அணை இன்று திறக்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணையை திறந்து வைத்தார். அப்போது அவர், காவிரித் தாய்க்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன். செங்கோட்டையன், உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேட்டூர் அணையில் இருந்து முதல் கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வரை உயர்த்தப்படும். இதன் மூலம் டெல்டா பகுதியில் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும்.