ஓசூர் மற்றும் நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

267

உதான் திட்டத்தின் கீழ் ஓசூர் மற்றும் நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், உதான் திட்டத்தின் கீழ் சேலத்தில் விமான நிலையம் அமைக்க முன் வந்ததற்கு அப்பகுதி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வாக குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் தொழில் மையமாக திகழ்ந்து வருவதை சுட்டிக் காட்டியுள்ள முதல்வர் பழனிசாமி, அங்கு சர்வதேச விமான நிலையம் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

உதான் – 1 திட்டத்தின் கீழ் நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதை குறிப்பிட்டுள்ள அவர், அந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்தியாவின் முக்கிய சுற்றுலா மையமாக ராமேஸ்வரம் திகழ்ந்து வருவதாக கூறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, அதை கருத்தில் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.