பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

142

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்த நிலையில், மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆனால் பொங்கல் பண்டிகை நெருங்குவதால், இதுவரை ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இந்தநிலையில், தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் கட்டிக்காக்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர்,
மத்திய அரசு கைவிரித்த சூழலில், ஜல்லிகட்டு விவகாரத்தில் தமிழக அரசு எள்ளளவும் பின்வாங்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்தாமல் போனதற்கு காங்கிரஸ் மற்றும் திமுக-தான் முக்கிய காரணம் என்று ஓ.பன்னீர்செல்வம் தமது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.