தமிழக முதலமைச்சராக, அதிமுக சட்டசபை குழு தலைவரான எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்கலாம் என தகவல் !

434

தமிழக முதலமைச்சராக, அதிமுக சட்டசபை குழு தலைவரான எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை பதவியேற்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், அக்கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி, தமக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தி வருகிறார். இதற்காக ஆளுநரை 2 முறை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த நிலையில் தம்மை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியுடன், அவைத்தலைவர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகியோரும் இன்று காலை 11.30 மணியளவில் ஆளுனர் வித்யா சாகர் ராவை சந்தித்து பேசினர். ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோரும் ராஜ்பவன் சென்றுள்ளனர். இந்த சந்திப்பின்போது, பெரும்பாலான எம்எல்ஏ-க்களின் ஆதரவு குறித்து ஆளுனர் வித்யா சாகர் ராவ் கேட்டறிந்தார்.