சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை கோவில்களின் நடை சாத்தப்படும்..!

608

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை கோவில்களின் நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாவது முழு சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.50 மணி வரை நிகழவுள்ளது. இதனையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோவிலில் இரவு கால பூஜைகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனையும் மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. மாலை 4 மணிக்கு, மீண்டும் சாமிக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். இதனை அடுத்து, நாளை காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் நடை இன்று மாலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி 15 நிமிடம் வரை மூடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் பிறகு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் சர்வ தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த திருமலை ஆர்ஜித பிரம்மோற்சவம் சேவை உள்ளிட்டவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள தேவஸ்தானம், சந்திர கிரகணத்தை யொட்டி அன்ன பிரசாதங்களும் வழங்கப்பட மாட்டது என்றும் அறிவித்துள்ளது.