அண்ணா தொழிற்சங்க முன்னாள் செயலாளர் ஆர். சின்னசாமி கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்..!

180

அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் செயலாளர் ஆர். சின்னசாமி அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் முன்னாள் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். சின்னசாமி இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும், நீக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளது. கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணாக செயல் பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப் பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல் பட்டதாலும் சின்னசாமி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அ.தி.மு.க. கட்சியினர் யாரும் சின்னசாமியுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது எனவும் தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைமை கட்டுப்பாடு விதித்துள்ளது.