முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்திக் கொலை

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர், கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகன் சிவமூர்த்தி, திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் கோவை செல்வதாக கூறிவிட்டு, காரில் சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, விசாரணை நடத்திய போலீசார் ஆம்பூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட இருந்த சிவமூர்த்தியின் காரை பறிமுதல் செய்தனர். வாகன சோதனையில் பிடிபட்ட மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் சிவமூர்த்தியை கொலை செய்தது தெரிய வந்தது.

சிவமூர்த்தி தன்னிடம் பணியாற்றிய புவனேஸ்வரி என்ற பெண்ணிடம் தொடர்பு வைத்து இருந்ததும், இதை அறிந்த அந்தப் பெண்ணின் கணவர் மூர்த்தி, தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததும் தெரிய வந்தது. கெலவரப்பள்ளி அணையில் வீசப்பட்ட சிவமூர்த்தியின் உடலை போலீசார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.