முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கில் மனைவி, மகன் மற்றும் மருமகள் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்..!

128

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கில் அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் எழும்பூர் குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குடும்பத்தினர் இங்கிலாந்து நாட்டில் 5 புள்ளி 37 கோடி ரூபாய் மற்றும் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளும், அமெரிக்காவில் 3 புள்ளி 28 கோடி ரூபாய் சொத்துகளும் வாங்கியது தொடர்பாக சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மற்றும் மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பதிலளிக்க வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் விளக்கம் அளித்த நிலையில் கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிரான புகார் மனுவை சென்னை எழும்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை கடந்த வாரம் தாக்கம் செய்தது.

இந்தப் புகார் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட எழும்பூர் குற்றவியல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்விழி, குற்றம் சாட்டப்பட்ட நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். இதையடுத்து நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி சிதம்பரம் ஆகியோர் இன்று எழும்பூர் குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். அப்போது விசாரணை நடத்திய நீதிபதி மூவரும் அடுத்த மாதம் 23ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.