என் குடும்பத்தை வேட்டையாடாதீர்கள் கண்ணியமாக வாழ விடுங்கள் – ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

657

என் குடும்பத்தை வேட்டையாடாதீர்கள், கண்ணியமாக வாழ விடுங்கள் என உச்சநீதிமன்றத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு முட்டுக்கட்டை போடப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தை நாடிய பின்னரே அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே ப.சிதம்பரம் சார்பில் 100பக்க மனு ஒன்று உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள அந்தரங்க உரிமைகளை பறிக்கும் வகையில், சிபிஐ மற்றும் அமலாக்க பிரிவினர் அத்துமீறி நடந்து வருவதாக அதில் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.தங்கள் குடும்பத்தினரை குறி வைத்து வேட்டையாடி வருவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். சிபிஐ மற்றும் அமலாக்க பிரிவினர் எங்கள் குடும்பத்தினரை வேட்டையாடுவதற்கு, முற்றுபுள்ளி வையுங்கள் என்றும், கண்ணியமாக வாழ அனுமதியுங்கள் எனவும் சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.