குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவியை 2 மாதங்களில் நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

259

சமூக ஆர்வலர் நாராயணன் குழந்தைகள் காப்பகங்களை முறைப்படுத்தக்கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி 16 சட்டப்படியான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கினார். காப்பகங்கள் குறித்த விவரங்களை நூறு நாட்களில் பதிவு செய்ய வேண்டும், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைத்தல், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை தகுந்த இல்லங்களுக்கு அனுப்ப வேண்டும், காப்பகங்கள் குறித்த தகவல்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட 16 பரிந்துரைகளை மனுதாரர் நாராயணன் வழங்கியிருந்தார்.
இந்த வழக்கில் ஆஜரான சமூக நலத்துறைச் செயலர் சிவசங்கரன், சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் லால் வேனா ஆகியோரிடம், மனுதாரரின் பரிந்துரைகளில் அமல்படுத்தக் கூடியவற்றையும், முடியாதவற்றையும் பட்டியலிட்டு சமர்பிக்க உத்தரவிட்டனர். குறிப்பாக நிபந்தனைகளில் ஒன்றான, அங்கீகாரமில்லாத காப்பகங்களை மூன்று மாதத்தில் மூடப்படும் என்றும், அங்கிருக்கும் குழந்தைகளை வேறு காப்பகங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதி
மேலும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு மத அமைப்புகள் நடத்தும் காப்பகங்களிலும் கட்டாயம் ஆய்வுசெய்து, பெற்றோரின் அனுமதியுடன் தங்கவைக்கப்பட்டுள்ளனரா? என்பதை உறுதி செய்யவும் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி பெஞ்ச் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அனுமதியில்லாத 13 காப்பகங்கள் மூடப்பட்டுள்ளன. 212 குழந்தைகள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
உத்தரவு
இதையடுத்து நீதிபதிகள், குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவியை 2 மாதங்களில் நிரப்ப வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை செப்டம்பர் 22 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்