அண்ணாநகரில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து! பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்!!

248

அண்ணாநகரில் இன்று அதிகாலை தனியார் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து நடந்தது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.
அண்ணாநகர் ரவுண்டானா அருகே அண்ணா பிளாசா என்ற தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில் தரைதளத்துடன் சேர்த்து மொத்தம் 4 மாடிகள் உள்ளன.
வாகனங்கள் நிறுத்துவதற்காக தரைதளத்தின் கீழே அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் வசதியும் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை இந்த வணிக வளாகத்தின் தரைதளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து பொது மக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சிறிது நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் 5 வண்டிகளில் விரைந்து வந்தனர். தரைதளத்தில் சுமார் 20 கடைகள் உள்ளன. இவற்றின் ஒரு பகுதியில் மட்டும் தீ பிடித்து எரிந்துக் கொண்டு இருந்தது. அருகே செல்ல முடியாத அளவுக்கு தீ கொளுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் சற்று தொலைவில் இருந்தபடியே தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருப்பினும் தீ கட்டுப்படவில்லை.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. 2–வது மாடியிலும், 3–வது மாடியிலும் எல்.ஐ.சி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தீ மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.